தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
44-வது சென்னை புத்தகக் காட்சியை ஒட்டி பபாசி சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 5 முதல் 7-ம் தேதி வரை ஓவிய போட்டிகள் நடத்தப்பட உள்ளன. புத்தகக் காட்சி நடக்கும் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் உள்ள புத்தக அரங்கில் தினமும் காலை 8.30 மணி முதல் காலை 10 மணி வரை போட்டிகள் நடைபெறும்.
முதல் நாளான 5-ம் தேதியன்று 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘எங்கள் குடும்பம்’, ‘புத்தக உலகம்’ ஆகிய தலைப்புகளிலும், 6-ம் தேதியன்று 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு, ‘புத்தகமும் நானும்’, ‘இயற்கையும் வாழ்வும்’ ஆகிய தலைப்புகளிலும், 7-ம் தேதியன்று பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு ‘கையிலிருக்கும் பூமி’, ‘உடலினை உறுதி செய்’ ஆகிய தலைப்புகளிலும் போட்டிகள் நடத்தப்படும். வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.3,000, இரண்டாம் பரிசு ரூ.2,000, மூன்றாம் பரிசு ரூ.1,000, ஆறுதல் பரிசு ரூ.500 வழங்கப்படும்.
போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஓவியம் வரைவதற்கான தாள், போட்டி நடைபெறும் புத்தக அரங்கத்திலேயே வழங்கப்படும். அடையாள அட்டையை எடுத்துவர வேண்டும். மாணவர்கள் தங்களின் பெயரை புத்தக அரங்கில் பதிவுசெய்துகொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு பபாசி செயலாளர் எஸ்.கே.முருகனை 80562-02942 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago