கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரவிசந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று, தற்போது நலிந்த நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு விண்ணப்பிப்பவர்கள், சர்வதேச, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றிருக்க வேண்டும். இப்போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
தங்களது இளம் வயதில் சாதனை படைத்தவர்கள் மட்டுமே தகுதி பெற்றவர்கள். முதியோருக்கான போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் இத்திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெற முடியாது. விண்ணப்பதாரர்கள் 2021 ஏப்ரல் முதல் தேதியில் 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.6 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு பதிவு பெற்ற அலுவலரால் சான்றொப்பமிடப்பட்ட விளையாட்டுச் சான்றிதழ் நகல்கள், வருமானச் சான்று நகல், வயது குறித்த சான்று நகல் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.
மத்திய அரசின் விளையாட்டு வீரருக்கான ஓய்வூதியம் பெறுவோர், மத்திய, மாநில அரசுகளிடம் ஓய்வூதியம் பெறுவோர் இத்திட்டத்தின்கீழ் ஓய்வூதியம் பெற இயலாது. தகுதிப் போட்டியின்றி நேரடியாக தேசிய, சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்ட போட்டிகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது. இணையதளத்தில் பதிவு செய்தபின், விண்ணப்பத்துடன் இணைக்கப்படும் விளையாட்டுச் சான்றிதழ்களின் அசல் சான்றை மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் காண்பிக்க வேண்டும். இதற்கு வரும் மார்ச் 17-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago