மாசாணியம்மன் குண்டம் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த 11 - ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நேற்று நடைபெற்றது. இதற்காக ஆனைமலை -சேத்துமடை சாலையில் உள்ள குண்டத்து காட்டில் 52 அடி நீளத்தில் 11 அடி அகலத்தில் குண்டம் அமைக்கப்பட்டது. அதில் பக்தர்கள் காணிக்கையாக அளித்த சுமார் 15 டன் விறகு கொண்டு தீ வளர்க்கப்பட்டது. இதனை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

குண்டம் இறங்கும் பக்தர்கள் நேற்று காலை ஆனைமலை உப்பாற்றில் புனித நீராடி, சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் கழுத்தில் செவ்வரளி மாலை அணிந்து குண்டம் மைதானத்தை வந்தடைந்தனர். அம்மனின் சூலாயுதத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அம்மன் அருளாளி குப்புசாமி மல்லிகை பூ பந்தை குண்டத்தில் உருட்டி விட்டு அம்மனின் உத்தரவு பெற்ற பின்னர், தலைமை முறைதாரர் மனோகரன் முதலில் குண்டத்தில் இறங்கினார். அதை தொடர்ந்து அம்மன் அருளாளி குப்புசாமி, மயான அருளாளி அருண் ஆகியோர் குண்டத்தில் இறங்கினர். நேற்று மதியம் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர். இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி, வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு மற்றும் கோயில் உதவி ஆணையர் சி.கருணாநிதி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

குண்டம் இறங்கும் விழாவையொட்டி நேற்று அம்மனுக்கு வெண்ணை காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. குண்டம் இறங்கிய பக்தர்களுக்கு வெண்ணை பிரசாதமாக வழங்கப்பட்டது. அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்