கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, சென்னிமலை அருகே விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கீழ்பவானி வாய்க்காலை நவீனப்படுத்தும் வகையில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை, பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை நிறைவேற்றினால் வாய்க்காலை ஒட்டியுள்ள பகுதிகளில் நீர் செரிவூட்டுவது நின்று விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதுடன், குடிநீர் பஞ்சமும் ஏற்படும் என கீழ்பவானி பாசன பகுதி விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இத்திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, சென்னிமலையில் கடந்த 12-ம் தேதி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சென்னிமலை அருகே தலவுமலை என்ற இடத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு முருங்கத் தொழுவு ஊராட்சி தலைவர் மு.ரவி தலைமை தாங்கினார். தமிழக விவசாயிகள் சங்க செயலாளர் செங்கோட்டையன், இயற்கை வாழ்வுரிமை அமைப்பாளர் கு.பொடாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூற்றுக்கணக்கானோர் கையில் காலிக்குடங்களை ஏந்தி, கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இன்று (27-ம் தேதி) சென்னிமலை அருகே அய்யம்பாளையம் பகுதியிலும், நாளை (28-ம் தேதி), திருப்பூர் மாவட்டம் வள்ளியரச்சல் பகுதியிலும், மார்ச் 1-ம் தேதி திட்டம்பாளையத்திலும், 2-ம் தேதி பெருந்துறை அருகே நல்லாம்பட்டியிலும் உள்ள வாய்க்கால் பகுதிகளில் காலை 7 மணிக்கு தொடர் போராட்டங்களை நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்