9, 10, 11-ம் வகுப்பு தேர்வுகள் ரத்துக்கு எதிராக தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

தேர்வுகள் இன்றி 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை ரத்து செய்யக் கோரி சென்னை டிபிஐ வளாகத்தில் தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அனைத்து பள்ளிகளையும், அனைத்து வகுப்புகளையும் உடனடியாக திறக்க வேண்டும், 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இன்றி தேர்ச்சி என்ற அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும், பள்ளிகளில் மாணவர்களுக்கு எளிமையான முறையில் தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள பள்ளிக்கல்வி ஆணையர் அலுவலகம் முன்பு நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்ட்டது.

சங்கத்தின் மாநிலத் தலைவர் கனகராஜ் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்பொதுச் செயலாளர் நந்தகுமார், துணைத் தலைவர் ஜே.பி.விமல், அமைப்புச் செயலாளர் தெய்வசிகாமணி. மாநில கல்வி ஆலோசனை குழு தலைவர் எவர்வின் புருஷோத்தமன். தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு தலைவர் மார்ட்டின் கென்னடி, பாதுகாப்பு குழு தலைவர் கே.ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு நிர்வாகிகள் அனைவரும் பள்ளிக்கல்வி ஆணையர் வெங்கடேஷ், பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் ஏ.கருப்புசாமி ஆகியோரைச் சந்தித்து மனுவை அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் நந்தகுமார் கூறும்போது, ‘‘தமிழக அரசு எங்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை என்றால் அடுத்து என்ன செய்யலாம் என்று மாநில உயர்நிலைக்குழு கூட்டம் கூடி முடிவெடுப்போம். நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்