புதிய அரசு மருத்துவக்கல்லூரி நாமக்கல்லில் திறப்பு காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் திறந்துவைத்தார்

By செய்திப்பிரிவு

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடத்தை, முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

நாமக்கல் ஆட்சியர் அலுவலகம் பின்புறம் ரூ.350 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவக் கல்லூரிக்கான கட்டுமானப் பணிகளை, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதி முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். நடப்பு கல்வியாண்டில் எம்பிபிஎஸ் சேர்க்கையைத் தொடங்கும் வகையில், கரோனா காலத்திலும் கட்டுமானப்பணிகள் வேகமாக நடைபெற்றன. தற்போது கல்லூரி கட்டிடம், நிர்வாக அலுவலகக் கட்டிடம் ஆகியவை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

புதிய மருத்துவக் கல்லூரி கட்டிடத்தை முதல்வர் பழனிசாமி, மார்ச் 1-ம் தேதி திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று மாலை தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாக, நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி, காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், நாமக்கல் ஆட்சியர் மெகராஜ், மருத்துவக்கல்லூரி டீன் சாந்தா அருள்மொழி, மருத்துவ அலுவலர் சதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்