மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், நீட் தேர்வில் வெற்றி பெற சிறப்பு பயிற்சி திட்டத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் நேற்று தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற சிறப்பு பயிற்சி திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் பங்கேற்று ‘நீட் - என்னால் முடியும்’ என்ற சிறப்பு பயிற்சி திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர், சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
2019-20-ம் கல்வியாண்டில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று நீட் தேர்வு எழுதிய 60 மாணவர்களில் 11 மாணவ, மாணவியர் மருத்துவ கல்வி பயிலும் வாய்ப்பைப் பெற்றனர். 2020-21-ம் கல்வியாண்டில் அதிக எண்ணிக்கையிலான மாணவ, மாணவியர் மருத்துவக் கல்வியில் சேர்ந்து பயிலும் வகையில் அவர்களுக்கு நீட் சிறப்பு பயிற்சியை 100 நாட்களுக்கு இலவசமாக அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கு ‘நீட் என்னால் முடியும்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
100 மாணவ, மாணவியர்களை தேர்வு செய்ய தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் எம்.எச்.சாலை பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 103 மாணவ, மாணவியரில்50 மாணவ, மாணவியர், புலியூர் பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 130 மாணவ, மாணவியரில்51 மாணவ, மாணவியர் என மொத்தம் 101 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, தக்க வல்லுநர்களைக் கொண்டு 100 நாட்களுக்கு முழுமையான நீட் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago