திருக்குறளை பார்வையற்றோர்படிக்கும் விதமாக பிரெய்லி வடிவில் உருவாக்க வேண்டும் என்று நீதிபதி சத்தியமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில் 44-வது புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
2-ம் நாளான நேற்று மாலை நிகழ்ச்சியில் நீதிபதி இல.சொ.சத்தியமூர்த்தி பேசும்போது, ‘‘வாசகர்கள், எழுத்தாளர்களுக்கு இடையேயான உறவுப் பாலமாக புத்தகக் காட்சி இருக்கிறது. திருக்குறளின் அடிப்படையில் இந்த மண்ணில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே நூல் உருவானதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. அத்தகைய திருக்குறளை பார்வையற்றோர் படிக்கும் விதமாக பிரெய்லி வடிவில் உருவாக்க வேண்டும். குழந்தைகளுக்கு கதை சொல்லும் நிலை தற்போது குறைந்துவிட்டது.
இணையதளங்கள் வழியாக தமிழ் மொழியை கற்பிக்கும் கருவிகள் கண்டறியப்பட வேண்டும்.’’ என்று தெரிவித்தார்.
பத்திரிகையாளர் மை.பா.நாராயணன் `மனிதம் காத்த ராமானுஜர்' என்ற தலைப்பில் பேசும்போது: ``செல்போன் உட்பட டிஜிட்டல் சாதனங்கள் நம் மனதை வென்று நம்மை இயந்திரதனமான வாழ்க்கையில் மூழ்கடிக்கின்றன.
நம் மனதை கட்டுப்படுத்தி நேர்மறையான சிந்தனைகளை மேம்படுத்தி வாழ முயற்சிக்க வேண்டும். அதற்கான அடித்தளத்தை ராமானுஜர் உட்பட பல்வேறு ஞானிகள் ஏற்படுத்தி வழிகாட்டியுள்ளனர்'' என்றார்.
இவ்வாறு அவர் பேசினார்.
பேராசிரியர் பர்வீன் சுல்தானா ‘உன்னில் இருந்து தொடங்கு’ தலைப்பில் பேசும்போது, ‘‘நூல்களின் வாசிப்புதான் நம் வாழ்வை நல்வழிப்படுத்தும். எனவே, சிறந்த புத்தகங்களை தேடி படிப்பது அவசியம்.
கவலை கொள்வதை தவிர்த்து, கிடைக்கும் வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்தினால் வெற்றி பெறமுடியும். கற்றுக்கொள்ளும் ஆர்வத்துடன், எங்கிருந்து மாற்றங்களை தொடங்க வேண்டும் என்ற தெளிவான பார்வை இருக்க வேண்டும்"என்றார். இந்த நிகழ்ச்சியில் பபாசி துணை தலைவர் ஒளிவண்ணன், பொருளாளர் ஆ.கோமதி நாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago