அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் தென் மாவட்டங்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் தொழிலாளர்கள், வியாபாரிகள், மாணவர்கள் உட்பட பலரும் கடும் சிரமத் துக்குள்ளாகினர்.
ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி, பணியாளர் சம்மேளனம், எம்.எல்.எப், ஏ.ஏ.எல்.எல்.எப், டி.டபிள்யூ.யு உட்பட 9 தொழிற் சங்கங்களைச் சேர்ந்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் வேலைநிறுத்தம் செய்து வருகின் றனர்.
மதுரை மண்டலத்தில் உள்ள 16 பணி மனைகளில் சுமார் 6,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் 80 சதவீதம் பேர் நேற்று பணிக்கு வரவில்லை. மதுரை மண்டலத்தில் உள்ள 950 பேருந்துகளில் 70 சதவீத பேருந்துகள் இயக்கப்படவில்லை. அதிமுக தொழிற்சங்கம் மற்றும் அரசு சார்பு தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களை வைத்து 30 சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன.
சில பணிமனைகளில் அதிமுக தொழிற் சங்கத்தினர் அதிகாலையில் பேருந்துகளை இயக்க முயன்றபோது, அதைக் கண்டித்து பணி மனை வாயில்களில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து புறநகர் பகுதிக்கு இயக்கப்பட்டு வந்த மினி பேருந்துகள் நகர் பகுதிக்கு இயக்கப்பட்டன. இதில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
மதுரை பொன்மேனி பணிமனையில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசுப் போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்கள். தொமுச பொதுச் செயலர் அல்போன்ஸ் கூறுகையில், தனியார் மற்றும் வெளி யாட்களைக் கொண்டு பேருந்துகளை இயக்க முயற்சி செய்து வருகின்றனர். இன்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்தால் அதிக தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்பர், என்றார்.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் சில அரசுப் பேருந்துகள் மட்டுமே இயங்கின. இதனால் வெளியூர்களுக்குச் செல்ல பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து தனியார் பேருந்துகளில் சென்றனர். அரசுப் பேருந்துகள் இயங்காததால் பழநி மலைக்கோயிலுக்கு வரும் பக்தர் களின் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்பட்டது. மாவட்டத்தில் 60 சதவீத அரசுப் பேருந்துகள் இயங்கவில்லை.
தேனி
தேனி மாவட்டத்தில் தேனி, பெரிய குளம், போடி, தேவாரம், கம்பம்-1, கம்பம்-2, லோயர்கேம்ப் உள்ளிட்ட 7 அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை களைச் சேர்ந்த 368 பேருந்துகளில் 171 பேருந்துகள் மட்டுமே இயங்கின. 2,600 ஊழியர்களில் 600 பேர் மட்டுமே வேலைக்கு வந்திருந்தனர். கிராமங்கள் மற்றும் நஷ்டத்தில் இயங்கும் வழித் தடங்களில் இயங்கும் பேருந்துகள் நிறுத்தப்பட்டன. சென்னை, பெங்களூரூ உள்ளிட்ட தொலை தூர பேருந்துகள் இயக்கப்படவில்லை.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 450 அரசுப் பேருந்துகளில் 160 பேருந்துகள் மட்டுமே இயங்கின. குறிப்பிட்ட வழித்தடங்களில் குறைந்த எண்ணிக்கையில் பேருந்துகள் இயக் கப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிர மத்துக்கு ஆளாகினர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாத புரம், பரமக்குடி, ராமேசுவரம், முது குளத்தூர், திருவாடானை, கமுதி உள்ளிட்ட 7 அரசுப் போக்குவரத்துப் பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் சுமார் 450 பேருந்துகளில் 30 சதவீதம் மட்டுமே இயங்கின. மதுரையிலிருந்து ராமநாதபுரத்துக்கு குறைந்த அளவே தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் ராமநாதபுரம் - ராமேசுவரம் இடையே தனியார் பேருந்துகள் எதுவும் நேற்று இயக்கப்படவில்லை.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் 60 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை. சிவ கங்கை, திருப்பத்தூர், காரைக்குடி, தேவகோட்டை, திருப்புவனம் ஆகிய பணிமனைகளைச் சேர்ந்த 175 புறநகர் பேருந்துகளில் 86 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. அதேபோல் 95 நகர் பேருந்துகளில் 22 இயக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் 60 சதவீத பேருந்து கள் இயங்கவில்லை.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago