திண்டுக்கல் பெட்ரோல் பங்க்கில் வித்தியாசமான போட்டி 10 குறள் ஒப்புவித்தால் 1 லிட்டர் பெட்ரோல் பரிசு ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

திண்டுக்கல்லில் 3 நிமிடத்தில் 10 குறட்பாக்களை ஒப்புவிக்கும் நபருக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கப்பட்டது. இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு பெட்ரோலை பரிசாகப் பெற்றனர்.

திண்டுக்கல்லில் நத்தம் சாலை குள்ளனம்பட்டியில் இயங்கி வரும் பெட்ரோல் பங்க்கில் வாகன ஓட்டுநர்களிடம் கல்வி விழிப்புணர்வுப் போட்டி நடத்தப்பட்டது. இதில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை, யார் வேண்டுமானாலும் கலந்துகொண்டு திருக்குறளில் இருந்து 10 குறட்பாக்களை 3 நிமிடத்தில் ஒப்புவித்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் 10 பொதுஅறிவு கேள்விக்கு சரியான பதில் அளித்தாலும் ஒரு லிட்டர் பெட்ரோல் பரிசாக அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், இலவசமாக பெட்ரோல் பெற பலர் ஆர்வமுடன் இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.

ஏராளமானோர் திருக்குறள் ஒப்புவித்தும், பொது அறிவு கேள்விகளுக்கு பதில் அளித்தும் ஒரு லிட்டர் பெட்ரோலை பரிசாகப் பெற்றனர். இதில் திருக்குறளை சிறப்பாக ஒப்புவித்த 8 வயது சிறுமியைப் பாராட்டும் வகையில், கூடுதலாக ஒரு லிட்டர் என மொத்தம் 2 லிட்டர் பெட்ரோல் அச்சிறுமிக்கு பரிசாக வழங்கப்பட்டது. மேலும் கல்வி குறித்து சிறந்த ’ஸ்லோகன்’ எழுதுபவருக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

கரோனா ஊரடங்கு காலத்தில் மாணவர்களிடையே கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், தமிழ்ப் பற்றை வளர்க்கும் வகையிலும் இப்போட்டிகளை நடத்தியதாக பெட்ரோல் பங்க் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்