ஈரோடு கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பிலான, 69 ஆயிரம் கிலோ நாட்டுச் சர்க்கரையை பழநி தேவஸ்தானம் கொள்முதல் செய்துள்ளது.
பழநி முருகன் கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தம் தயாரிக்கத் தேவையான நாட்டுச்சர்க்கரை, ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. கரோனா கட்டுப்பாடுகள் தளர்வு மற்றும் தைப்பூசத்தை தொடர்ந்து பழநிக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், பஞ்சாமிர்த பிரசாதத்திற்கான தேவையும் அதிகரித்துள்ளது. இதனால், ஈரோட்டில் இருந்து நாட்டுச்சர்க்கரை கொள்முதலும் அதிகரித்து வருகிறது.
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடந்த கரும்புச்சர்க்கரை ஏலத்தில், சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், 1163 மூட்டை நாட்டுச்சர்க்கரையை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதில், 60 கிலோ மூட்டை குறைந்தபட்ச விலையாக ரூ.2220-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.2270-க்கும், சராசரி விலையாக ரூ.2245-க்கும் ஏலம் போனது.
நேற்றைய ஏலத்தில், பழநி முருகன் கோயில் தேவஸ்தானத்திற்கு, 69 ஆயிரத்து 780 கிலோ கரும்புச்சர்க்கரையை, ரூ.25 லட்சத்து 94 ஆயிரத்து 475-க்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது, என ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் மு.சீனிவாசன் தெரிவித்துள்ளார். பழநி முருகன் கோயில் தேவஸ்தானத்திற்காக, கடந்த ஒரு மாதத்தில் ரூ.70 லட்சம் மதிப்பிலான சர்க்கரை கவுந்தப்பாடியில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago