திருவெண்ணெய்நல்லூர் அருகே வீட்டில் இருந்த பீரோவை தூக்கிச் சென்று 32 பவுன் நகை திருட்டு

By செய்திப்பிரிவு

திருவெண்ணெய்நல்லூர் அருகே வீட்டில் இருந்த பீரோவை தூக்கிச் சென்று 32 பவுன் நகை திருடப்பட்டது.

திருவெண்ணெய்நல்லூர் அருகே பேரங்கியூர் குச்சி பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் (48). விவசாயியான இவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவரது மகன் சசிகுமார் (25), இவரது மனைவி ஹரிதா மற்றும் குழந்தை ஆகிய மூவரும் நேற்று முன்தினம் இரவு வீட்டில் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

சக்திவேலும் அவரது மனைவியும் செங்கல்சூளை கொட்டகையில் தூங்கி விட்டனர்.

செங்கல்சூளைக்கு சென்ற தந்தை மீண்டும் வீட்டுக்கு வருவார் என்ற கவனத்தில் சசிகுமார் வீட்டை பூட்டாமல் வைத்திருந்தார். பின் அதிகாலை சிறுநீர் கழிக்க வெளியே செல்லும் போது வீட்டின் முன்பக்க தாழ்பாள் போட்டு வீடு பூட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டிலிருந்த சசிகுமார் தனது நண்பருக்கு செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு வீட்டின் கதவை திறக்க சொன்னார்.

அவர் வந்து வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் ஒரு அறையில் இருந்த சிறிய அளவிலான இரும்பு பீரோ காணாமல் போய்விட்டது. கிராம மக்கள் பீரோவை தேடினர். வீட்டின் முன்பக்கம் உள்ள வயல்வெளியில் பீரோ உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது.

நள்ளிரவில் திருடர்கள் வீட்டின் முன்பக்கம் வழியாக உள்ளே நுழைந்து, பீரோவை தூக்கிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து சசிகுமார் அளித்த புகாரில் 32 பவுன் நகை திருடு போனதாக குறிப்பிட்டிருந்தார்.

விழுப்புரம் டிஎஸ்பி நல்லசிவம் மற்றும் திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் வயல் வெளியில் இருந்த பீரோவை கைப்பற்றி விசாரணை செய்தனர். விழுப்புரத்தில் இருந்து மோப்ப நாய் சாய்னா வரவழைக்கப்பட்டது. அது சற்று தூரம் ஓடி நின்று விட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்