உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி, கரூர், புதுக்கோட்டை, நாகை மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ளதுபோல, தமிழகத்திலும் மாதாந்திர உதவித்தொகையாக மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,000, கடும் பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும். தனியார் துறை வேலைவாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத பணியிடங்களை தமிழக அசு உறுதி செய்து, அரசாணை பிறப்பிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் நேற்று முன்தினம் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, போராட்டத்தின் 2-வது நாளான நேற்று ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட 40 பெண்கள் உட்பட 70 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதேபோல, திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாற்றுத்திறனாளிகள், நேற்று சாலை மறியலில் ஈடுபட்டதால், 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே நேற்று, சங்கத்தின் ஒன்றிய அமைப்பாளர் மாலதி தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. அவர்களை கறம்பக்குடி போலீஸார் சமாதானப்படுத்தி, கலைந்துபோகச் செய்தனர். பின்னர், அவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். அங்கு, இவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் எஸ்.சங்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்றதால் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் 60 பேரை போலீஸார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர். விடுவிக்கப்பட்ட அனைவரும் மயிலாடுதுறை மணிக்கூண்டு பகுதியில் மாவட்டச் செயலாளர் கணேசன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில்ஈடுபட்ட அனைவரையும் போலீஸார் மீண்டும் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய குடியேறும் போராட்டம் இரவிலும் தொடர்ந்து, நேற்று வரை நீடித்தது. பின்னர், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கணேசன் தலைமையில் நேற்று மதியம் சாலை மறியலில் ஈடுபட்ட 53 பெண்கள் உள்ளிட்ட 78 பேரை அரவக்குறிச்சி போலீஸார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, மாநில நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்திருப்பதாகக் கூறி, போராட்டம் திரும்பப்பெறப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago