சேலம் மாநகர காவல்துறை சார்பில் போலீஸாருக்கு சட்டையில் பொருத்தும் கேமரா வழங்கல்

By செய்திப்பிரிவு

சேலம் மாநகர காவல்துறை சார்பில் ரோந்து போலீஸாருக்கு சட்டையில் பொருத்தும் கேமரா வழங்கப்பட்டன.

சேலம் மாநகர காவல்துறை சார்பில் ரோந்து போலீஸாருக்கு, சட்டையில் அணிந்து கொள்ளும் கேமரா வழங்கும் நிகழ்ச்சி, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்தது. துணை ஆணையர் (சட்டம்-ஒழுங்கு) சந்திரசேகரன் முன்னிலை வகித்தார்.

சேலம் டவுன், செவ்வாய்பேட்டை உள்ளிட்ட 9 காவல் நிலையங்களைச் சேர்ந்த ரோந்து போலீஸாருக்கு, தலா ரூ.21 ஆயிரம் மதிப்புள்ள சட்டையில் அணிந்து கொள்ளும் கேமராவை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ்குமார் வழங்கி பேசியதாவது:

ரோந்து செல்லும் போலீஸார் அனைவரும் கேமராவை அணிந்து செல்ல வேண்டும். பணியின்போது, எவரேனும் தகாத முறையில் பேசினாலும், குற்றவாளிகளை தேடிச் செல்லும்போது அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடும்போதும், கேமரா மூலம் நிகழ்வுகளை பதிவு செய்ய வேண்டும். இது விசாரணைக்கு முக்கிய ஆதாரமாக அமையும்.

மேலும், போலீஸார் அவதூறாக பேசியதாக எவரேனும் மோசடியாக குற்றச்சாட்டுகளை தெரிவிக்கும்போது, கேமரா பதிவின் மூலம் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ள முடியும். போலீஸார் அனைவரும் கேமராவை இயக்குவதை அறிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முதல்கட்டமாக 9 காவல் நிலையங்களுக்கு தலா 3 கேமராக்கள் வழங்கப்பட்டன.

மேலும், பொதுமக்கள் கூடும் இடங்களில் அறிவிப்பு செய்யவும், நிகழ்ச்சிகளின்போது பயன்படுத்தவும் மைக்குடன் கூடிய ஸ்பீக்கர் செட்டும் வழங்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்