தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகளை தமிழர்களுக்கே வழங்க வலியுறுத்தி, சேலம் ஓமலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் 28-ம் தேதி மாநில மாநாடு நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கே அரசுப் பணிகளை வழங்க வேண்டும். கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நடைமுறை உள்ளது. தமிழகத்தில் பிற மாநிலத்தவர்களுக்கு அரசுப் பணிகள் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தமிழர்களுக்கு அரசு வேலைவாய்ப்புகளை வழங்க வலியுறுத்தி, ஓமலூரில் 28-ம் தேதி தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் மாநில மாநாடு நடத்தப்பட உள்ளது. தேர்தல் அரசியலுக்காக வன்னியர்களுக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு என பாமக வலியுறுத்தி வருகிறது.
தமிழக அரசு அனைத்து வன்னியர் சங்க அமைப்புகளின் ஒத்த கருத்துகளின் அடிப்படையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு அறிவிக்க வேண்டும். காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டம் தேர்தலை மனதில் வைத்து தான் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடன் ரூ.5.7 லட்சம் கோடியாக உள்ள நிலையில், புதுப்புது அறிவிப்புகளை முதல்வர் செய்து வருகிறார். தேர்தலில் கல்வி, மருத்துவம் போன்ற அத்தியா வசியத் தேவைகளுக்கான இலவச அறிவிப்புகளை வரவேற்கிறோம், என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago