நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் மறியல் சத்துணவு ஊழியர்கள் 1,141 பேர் கைது

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மற்றும் தென்காசி, தூத்துக்குடியில் மறியலில் ஈடுபட்ட 1,141 சத்துணவு ஊழியர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

`காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியருக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்’ என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கருப்பு உடை அணிந்து மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற மறியலுக்கு செபத்தி யாள், ஜெலட்மேரி ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட துணைத் தலைவர் சி. பிச்சையா பேசினார். அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் என்.குமாரவேல், பொருளாளர் கற்பகம் ஆகியோர் பேசினர். போராட்டத்தில் ஈடுபட்ட 205 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி

தென்காசியில் மாவட்ட ஊராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத் துக்கு மாவட்டத் தலைவர் எஸ்.பிச்சுமணி தலைமை வகித்தார். செயலாளர் பா.கோவில்பிச்சை பேசினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாநில துணைத் தலைவர் வி. சண்முகசுந்தரம், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத் தலைவர் எம். திருமலைமுருகன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர். இப்போராட்டத்தில் ஈடுபட்ட 343 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் பாளையங் கோட்டை சாலையில் அம்பேத்கர் சிலை அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஏ.பாக்கிய சீலி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்சேகர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில துணைத் தலைவர் மு.தமிழரசன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட 565 பெண்கள் உள்ளிட்ட 593 பேரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்