முகாமில் யானையைத் தாக்கிய பாகன் சிறையிலடைப்பு

By செய்திப்பிரிவு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் கடந்த 8-ம் தேதி முதல் கோயில் யானைகளுக்கான நலவாழ்வு முகாம் நடைபெற்று வருகிறது. இதில், 26 யானைகள் கலந்து கொண்டுள்ளன. இந்நிலையில், வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதாவை, அதன் பாகன் வினில்குமார் (46) மற்றும் உதவியாளர் சிவபிரசாத் (32) ஆகியோர் குச்சியால் தாக்கும்போது, வலியால் யானை கதறுவதுபோன்ற வீடியோ காட்சி நேற்றுமுன்தினம் வெளியாகி, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதையடுத்து, பாகன் வினில்குமாரை சஸ்பெண்ட் செய்து, வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் நிர்வாகம் உத்தரவிட்டது. இந்நிலையில், பாகன் மற்றும் உதவியாளர் மீது வன விலங்கு பாதுகாப்பு சட்டம், தமிழ்நாடு வளர்ப்பு யானை (மேலாண்மை, பராமரிப்பு) விதிகளின்கீழ் வழக்கு பதிவு செய்த மேட்டுப்பாளையம் வனத் துறையினர், இருவரையும் கைது செய்தனர். பின்னர், நீதிபதி முன்னிலையில் இருவரையும் ஆஜர்படுத்தி, அவிநாசி கிளைச் சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, "யானையை நிர்வகிப்பதற்கான பொருத்தமான வழிமுறைகள் அறநிலையத் துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கோயில் யானையுடன் வந்த உதவியாளர் சுப்பிரமணியம், தற்போது ஜெயமால்யதா யானையைக் கண்காணித்து வருகிறார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக தேக்கம்பட்டி முகாமில் இந்த யானையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். யானைக்கு மாற்றுப்பாகனை நியமிப்பது தொடர்பாக அறநிலையத் துறையினர் பரிசீலித்து வருகின்றனர். ஜெயமால்யதா யானையை முழுமையாகப் பரிசோதித்த கோவை வன கால்நடை அலுவலர், யானைக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார்" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்