திருப்பூர் மாவட்டம் தெக்கலுார் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது ஒரு வயது குழந்தை நித்தீஷுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு, அழுதுகொண்டே இருந்துள்ளது.
இதையடுத்து, அக்குழந்தையை கோவை அரசு மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவில் அனுமதித்துள்ளனர். துறைத் தலைவர் அலி சுல்தான் தலைமையிலான மருத்துவர்கள் எக்ஸ்-ரே மற்றும் சி.டி. ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்ததில், குழந்தையின் உணவுக்குழாயில், திறந்த நிலையில் பின்னூசி ஒன்று குத்தி இருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. உடனடியாக மயக்கவியல்துறை மருத்துவர் மணிமொழிசெல் வன் உதவியுடன், இரைப்பை,குடல், கல்லீரல் துறை உதவிப் பேராசிரியர் வி.அருள்செல்வன் தலைமையிலான குழுவினர், பின்னூசியை அறுவை சிகிச்சை யின்றி ‘எண்டோஸ்கோப்பி' மூலம் பாதுகாப்பாக வெளியே எடுத்தனர். சிகிச்சை முடிந்து குழந்தை நலமுடன் வீடு திரும்பியுள்ளது.
இதுகுறித்து மருத்துவர் அருள்செல்வன் கூறும்போது, “கையில் கிடைத்ததை வாயில் வைத்துக்கொள்ளும் சுபாவம் குழந்தைகளுக்கு இயல்பாக இருக்கும். அவ்வாறு, பொம்மைகளில் உள்ள பட்டன் பேட்டரி, பின்னூசி, குண்டூசி, சட்டை பட்டன்கள், ஊக்குகள், நாணயங்கள் போன்றவற்றை வாயில் வைக்கும்போது, வழு வழுவென இருக்கும் என்பதால் எளிதாக உணவுக்குழாய், மூச்சுக் குழாய்க்குள் சென்றுவிடும். எனவே, குழந்தைகள் விளையாடும்போது பெற்றோர் கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதேபோல, நிலக்கடலை, பட்டாணி, மக்காச்சோளம், சிறு கற்கள் போன்ற பொருட்களை வாயில் போட்டுக் கொள்ளாமல் தடுக்க வேண்டும். இயல்பான குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டாலோ, சாப்பிடுவதில் சிரமம் ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுவர வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago