ரயான் வகை துணி உற்பத்தி 11 நாட்களுக்குப் பிறகு தொடக்கம்

By செய்திப்பிரிவு

ஈரோடு அசோகபுரம், மாணிக்கம்பாளையம், வீரப்பன்சத்திரம், சூளை, சூரம்பட்டி, சித்தோடு, லக்காபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் ரயான் துணி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தி செய்யப்படும் ரயான் ரகம் குஜராத், மகாராஷ்டிரா போன்ற வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் சமீபகாலமாக நூல் விலை உயர்ந்த அளவுக்கு ரயான் துணி ரகத்தின் விலை உயரவில்லை. இதனால் ரயான் ரகம் உற்பத்தி செய்யும் விசைத்தறியாளர்களுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டு வந்தது. தொடர் நஷ்டத்தை தவிர்க்கும் வகையில், ரயான் ரக உற்பத்தியை 11 நாட்களுக்கு நிறுத்தி வைப்பது என விசைத்தறியாளர்கள் முடிவு செய்தனர். இதன்படி கடந்த 11-ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை 11 நாட்களுக்கு ரயான் உற்பத்தி மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இதன் மூலம் 30,000 விசைத்தறியில் நாள் ஒன்றுக்கு சுமார் 24 லட்சம் மீட்டர் ரயான் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது. 11 நாட்கள் உற்பத்தி நிறுத்தத்தால் ரூ.82 கோடி மதிப்பிலான வர்த்தகம் முடங்கியதாக விசைத் தறியாளர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தொழிலாளர்கள் நலன் கருதி, நேற்று முதல் விசைத்தறிக் கூடங்களில் ரயான் துணிவகை உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது என விசைத்தறி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்