புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு ஒரு ஜனநாயகப் படுகொலை. அநாகரிகமானது, என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்பு சட்டம் திரும்பப் பெற வேண்டும். இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பாலன் சீனிவாசன், சித்தானந்தன், செல்வராஜ் ஆகியோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்த் தேச மக்கள் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிட விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர் திருமாவளவன் கூறியதாவது:
புதுச்சேரியில் நடந்திருக்கும் ஆட்சி கவிழ்ப்பு ஒரு ஜனநாயகப் படுகொலை. அநாகரிகமான அரசியல் அரங்கேற்றத்தை நடத்தியுள்ளனர். இந்த போக்கு நாட்டுக்கு நல்லது அல்ல. புதுச்சேரியில் நடந்திருப்பது ஒரு ஒத்திகையே, தமிழகத்தில் இதை விரிவுபடுத்த வாய்ப்பிருக்கிறது. இதை அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கண்டிக்க வேண்டும்.
அதிமுகவுக்கு எதிராக எதிர்ப்பு நிலவுகிறது. ஆளும்கட்சி மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு செயலிழந்து கிடப்பதை திமுகவும், திமுக தோழமைக் கட்சிகளும் அம்பலப்படுத்தி வருவதால், திமுகவுக்கு எதிரான விமர்சனங்களை அதிமுக முன்வைத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago