அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தை அழைத்துப் பேசி சுமூகத் தீர்வும் காண வேண்டும் என்று முதல்வர் பழனிசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வருக்கு பாலகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அரசுத் துறையில் உள்ள4 லட்சத்து 50 ஆயிரம் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அவுட்சோர்சிங் முறையை ஊக்குவித்து நிரந்தரப் பணிகளை இல்லாமல் செய்து, இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிப்பது உள்ளிட்ட ஆதிசேஷய்யா கமிஷனின் பரிந்துரைகளை நிராகரிக்க வேண்டும்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
அதன் ஒருபகுதியாக கடந்த 19-ம் தேதி ஆர்ப்பாட்டத்துக்காக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் ஏராளமான பேர் சென்னையில் குவிந்தனர். முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதுதான் அவர்களது நோக்கம்.
ஆனால், அரசுத் தரப்பில் பேசுவதற்குப் பதிலாக, பல்வேறு இடங்களில் காவல்துறையினர் தடியடி பிரயோகம் செய்ததில் பெண் ஊழியர் உட்பட 7 பேர் காயம்அடைந்து மருத்துவமனை செல்ல நேரிட்டது.
போராட்டம் என்கிற ஜனநாயக செயல்பாட்டில் இறங்கியவர்கள் மீது காவல் துறையினர் இத்தகைய வன்தாக்குதல் நடத்தியது மிகவும் மோசமான நடவடிக்கையாகும். இந்த மனித உரிமை மீறலுக்கு காரணமான காவலர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு ஊழியர்கள் விவகாரத்தை கவுரவப் பிரச்சினையாகப் பார்க்காமல் தமிழக அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு காண வேண்டும். இவ்வாறு கடிதத்தில் பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago