ஊதிய முரண்பாடுகளை நீக்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

ஊதியக்குழு முரண்பாடுகளை நீக்கக்கோரி சென்னையில் நேற்று இடைநிலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு 8-வது ஊதியக்குழு முரண்பாடுகளை நீக்குவது, 21 மாத கால நிலுவைத் தொகை, அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்துவிட்டு மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துவது என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் சார்பில் சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

அந்த அமைப்பின் மாநில தலைவர் செ.அப்பாத்துரை தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியைகள் அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் மு.அன்பரசு ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து பேசும்போது, "இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை சரிசெய்வதுடன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

இடைநிலை ஆசிரியர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் அ.சங்கர் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் கேபிஓ சுரேஷ், ஜாக்டோ ஜியோ நிதி காப்பாளர் ச.மோசஸ் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்