அரசு ஊழியராக அறிவிக்கக் கோரி அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் ஏராளமானோர் பங்கேற்பு

By செய்திப்பிரிவு

அரசு ஊழியராக அறிவிக்கக் கோரி அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை தரமணியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர் சங்கம் சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் 200-க்கும்மேற்பட்ட ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களை அரசு ஊழியராக அறிவிக்க வேண்டும். ஊழியர்களுக்கு ரூ.21 ஆயிரம், உதவியாளர்களுக்கு ரூ.18 ஆயிரம் ஊதியமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

இப்போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.டெய்சி கூறியதாவது:

கடந்த ஆண்டுகளில் நடந்த போராட்டங்களின்போது அமைச்சரும், அதிகாரிகளும் ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை. அமைச்சரை 3 மாதத்துக்கு ஒருமுறையும், அதிகாரிகளை மாதம் 3 முறையும் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறோம்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குநர் அலுவலகம் முன்பு கடந்த 5-ம் தேதி மாநிலம் தழுவிய பெருந்திரள் முறையீட்டு போராட்டம் நடத்தினோம். அப்போது பேச்சுவார்த்தை நடத்திய சமூகநலத் துறை செயலாளர் மதுமிதா, ஊழியர்களின் முதல் 3 கோரிக்கைகள் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று உறுதி அளித்தார். ஆனாலும், அறிவிப்பு வெளியிடாததால் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளோம். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்றார்.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் சார்பில் திருவள்ளூரில் நடந்த போராட்டம் காலை முதல் மாலை வரை, 7 மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. இதில், சங்கத்தின் மாநில இணைச் செயலாளர் லட்சுமி, மாவட்டத் தலைவர் மணிமேகலை, மாவட்ட செயலாளர் லதா, மாவட்ட பொருளாளர் உமா உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் என350-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கோரிக்கை முழக்கமிட்டனர்.

அதேபோல், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள காவலான் கேட் பகுதி முன், தங்களை அரசு ஊழியர்களாக்கக் கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் உட்பட 250-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் பங்கேற்று, கோரிக்கை முழக்கமிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்