நான் சொல்வதை சாதித்துக் காட்டி வருகிறேன் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்

By செய்திப்பிரிவு

நான் திட்டங்களை வெறுமனே அறிவித்து வருவதாக ஸ்டாலின் கூறுகிறார். நான் சொல்வதை சாதித்துக் காட்டி வருகிறேன் என சேலத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக-வில் முதல்முறையாக சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் மகளிர் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஆலோசனைக் கூட்டம் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு, புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில், 13,840 மகளிர் பூத் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1.76 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தலா 10 வாக்குகளை சேகரித்தாலே, அதிமுகவின் வெற்றி உறுதியாகிவிடும்.

பெண்களுக்காக பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தார். திருமண உதவித்தொகை, கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித்தொகை, கருவுற்ற பெண்களுக்கு சஞ்சீவினி மருந்துப் பெட்டகம், குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்-சேய் நலப்பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. 2.94 லட்சம் உழைக்கும் பெண்களுக்கு 50 சதவீதம் மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளன.

திமுக 5 முறை ஆட்சியில் இருந்தபோது மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கவில்லை. இப்போது ஆட்சியை கைப்பற்ற ஸ்டாலின் துடிக்கிறார். அவரின் நாடகம் வெளுத்துவிட்டது.

நான் திட்டங்களை வெறுமனே அறிவித்து வருவதாக ஸ்டாலின் கூறுகிறார். நான் சொல்வதை சாதித்துக் காட்டி வருகிறேன். ஆசியாவிலேயே பெரிய கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா தலைவாசலில் அமைக்கப்படும் என அறிவித்தேன். நானே அடிக்கல் நாட்டினேன். அறிவித்த ஓராண்டுக்குள் இப்போது அதனை நானே திறந்து வைக்கிறேன்.சொல்வதை செய்து காட்டி வருகிறேன்.

இந்தியாவிலேயே மகளிர் பூத் கமிட்டி அமைப்பு, இப்போது தான் உருவாக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக சந்திக்கும் முதல் சட்டப்பேரவைத் தேர்தல் இது. எனவே, மகளிர் அனைவரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு மீண்டும் அதிமுக அரசை அமைக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

கூட்டத்தில், அமைப்புச் செயலாளர் பொன்னையன், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், எம்எல்ஏ-க்கள் செம்மலை, வெங்கடாசலம், சின்னத்தம்பி, மருதமுத்து, சித்ரா, மனோன்மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பரமத்திவேலூரில் ரூ.406 கோடியில் தடுப்பணை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே கபிலர்மலையில் முதல்வர் பழனிசாமி நேற்று முன்தினம் இரவு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது முதல்வர் பேசியதாவது:

தமிழகத்தில் 52 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கூட இதுபோன்ற திட்டம் இல்லை. தமிழகம் முழுவதும் 6,211 ஏரிகள் ரூ.1,117 கோடி மதிப்பில் தூர் வாரப்பட்டுள்ளது. பரமத்தி வேலூர் பகுதியில் ரூ.406 கோடி மதிப்பில் தடுப்பணைகள் கட்டப்படுகிறது.

திமுக ஆட்சியில் கடுமையான மின்வெட்டு இருந்தது. விவசாயம், தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டன. ஜெயலலிதா தலைமையில் அதிமுக அரசு பொறுப்பேற்றவுடன் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது.

நீர்மேலாண்மை திட்டத்திற்காக தமிழகம் தேசிய விருது பெற்றுள்ளது. உள்ளாட்சித் துறையில் 143 விருதுகள் பெறப்பட்டுள்ளன. ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக ஆட்சியில் ஒன்றுமே நடக்கவில்லை எனக் கூறுகிறார். ஜேடர்பாளையத்தில் ராஜவாய்க்கால் வெட்டிய அல்லாள இளையநாயக்கருக்கு ரூ.30 லட்சம் மதிப்பில் மணி மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. ஒரு வார காலத்தில் மணி மண்டபம் திறக்கப்படும். தேர்தல் நேரத்தில் நிறைய அறிவிப்பு வெளிவரும், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்