தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம்சார்பில், ஆட்சியர் அலுவலகங்களில் காத்திருக்கும் போராட்டம் நேற்று தொடங்கியது.
`அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊழியர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். அகவிலைப்படியுடன் கூடிய முறையான ஓய்வூதியம்,குடும்ப ஓய்வூதியம் வழங்கவேண்டும். அங்கன்வாடி பணியாளருக்கு பணிக்கொடையாக ரூ.10 லட்சம், உதவியாளருக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்’ என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெறுகிறது.
ஏற்கெனவே, மூன்றுகட்ட போராட்டங்கள் நடத்தியும் தீர்வு காணப்படாததால், தீர்வு கிடைக்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என, அங்கன்வாடி பணியாளர்கள் அறிவித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஞானம்மாள் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கீதா, பெருமாள், முருகன், சரவணபெருமாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல், தென்காசி மாவட்டஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் தேவி தலைமை வகித்தார். சிஐடியு நிர்வாகி வேல்முருகன் தொடக்கவுரையாற்றினார். பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் வாழ்த்துரையாற்றினர். இந்த போராட்டங்களில் ஏராளமான அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் ஏ.மாரியம்மாள் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே.ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.சந்திரா கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
நாகர்கோவில்
நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன் கடும் வெயிலுக்கு மத்தியில் குடைபிடித்தவாறு அமர்ந்து அங்கன்வாடி ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சரஸ்வதி தலைமை வகித்தார். போராட்டத்தை சிஐடியு மாவட்டச் செயலாளர் தங்கமோகன் தொடங்கி வைத்தார்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago