அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும் காவிரி- கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
கரூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் உழவன் திருவிழா விவசாயிகள் மாநாடு, வாங்கல் அருகேயுள்ள தண்ணீர்பந்தல்பாளையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு புகழூர் வாய்க்கால் மற்றும் பாப்புலர் முதலியார் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க தலைவர் எம்.நடராஜன் தலைமை வகித்தார்.
விழாவில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி பேசியது: 50 ஆண்டு கால காவிரி பிரச்சினைக்கு சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. விவசாயிகளுக்கு சோதனை வரும்போதெல்லாம் அவர்களுக்கு நேசக்கரம் நீட்டியது அதிமுக அரசு. இப்போது, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற ரூ.12,110 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
37 லட்சம் விவசாயிகளுக்கு வறட்சி இடுபொருள் நிவாரணமும், மழை, புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.1,116 கோடி நிவாரணமும் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் எம்.ஆர்.விஜய பாஸ்கர், தங்கமணி ஆகியோரின் கோரிக்கையை ஏற்று புகழூர் காவிரி ஆற்றில் ரூ.410 கோடியில் கதவணை அமைக்கப்படுகிறது.
பல ஆண்டுகளுக்கு பின் நீர் நிலைகள் அனைத்தும் தூர்வாரப் பட்டன. ஆண்டுதோறும் 27 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப் படும் நிலையில், நிகழாண்டு 32.48 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்ததும் காவிரி- கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்றார்.
விழாவில், அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், பி.தங்கமணி, எம்எல்ஏ ம.கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வாங்கல் மற்றும் நெரூர் வாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க பி.முத்துகுமாரசாமி வரவேற்றார். நொய்யல் கால்வாய் பாசன விவசாயிகள் சங்க தலைவர் எம்.பி.நடேசன் நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago