விலை உயர்வால் 10-வது நாளாக ரயான் ரக ஜவுளி உற்பத்தி நிறுத்தம் மாதம் ஒருமுறை நூல்விலையை மத்திய அரசு நிர்ணயிக்க வேண்டும் ரயான் ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை

By செய்திப்பிரிவு

ஈரோடு சுற்றுவட்டாரத்தில் உள்ள விசைத்தறிக் கூடங்களில் நூல் விலை உயர்வால் தொடர்ந்து 10-வது நாளாக ரயான் ரக ஜவுளி ரகங்கள் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மாதம் ஒருமுறை நூல் விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்ய வேண்டும், என விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரோடு அசோகபுரம், மாணிக்கம்பாளையம், வீரப்பன்சத்திரம், சூளை, சூரம்பட்டி, சித்தோடு, லக்காபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ரயான் துணி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தி செய்யப்படும் ரயான் ரகம் குஜராத், மகாராஷ்டிரா போன்ற வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்நிலையில் சமீபகாலமாக ரயான் நூல் விலை உயர்ந்த அளவுக்கு ரயான் துணி விலை உயரவில்லை. தீபாவளியன்று ஒரு கிலோ ரயான் நூல் ரூ.150-க்கு விற்பனையானது.

அதைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி கிலோ ரூ.168, 25-ம் தேதி கிலோ ரூ.230 என தொடர்ந்து விலை அதிகரித்துக் கொண்டே இருந்தது.

இதனால் விசைத்தறியாளர்கள் பெரும் இழப்பை சந்தித்து வந்தனர். இந்நிலையில் தொடர் இழப்பை ஈடு செய்ய உற்பத்தியை நிறுத்த கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற விசைத்தறி யாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி கடந்த 11-ம் தேதி முதல் விசைத்தறிக் கூடங்களில் ரயான் ரகம் ஜவுளி மட்டும் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து 10-வது நாளாக நேற்றும் உற்பத்தி நிறுத்தம் நீடித்து வருகிறது.

இதன்மூலம் நாள்தோறும் 24 லட்சம் ரயான் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.82 கோடி வர்த்தகம் முடங்கியுள்ளது.

அதேவேளையில் பஞ்சு விலை உயரும்போது மட்டுமே நூல் விலையை உயர்த்த வேண்டும். இல்லையெனில் மாதம் ஒருமுறை நூல் விலையை மத்திய அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போது பாதிப்பு ஏற்படாது என, விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்