டாஸ்மாக் மதுபானக் கடை ஊழியரை தாக்கிய 4 பேரை மொடக்குறிச்சி காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே உள்ள 46 புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (46). இவுர் ஈரோடு சோலார் பாலுசாமி நகர் பின்புறம் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இரு தினங்களுக்கு முன்னர் இரவு 10 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வரவு செலவு கணக்கு பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது கடைக்கு வந்த 4 பேர் டாஸ்மாக் கடையின் கதவை தட்டி மது கேட்டுள்ளனர். கடையை பூட்டியதால் மதுபானம் வழங்க இயலாது என ராஜன் கூறியுள்ளார். சிறிது நேரத்தில் அவர் கடையில் இருந்து வெளியே வந்துள்ளார். அப்போது அங்கிருந்த நால்வரும் விற்பனையாளர் ராஜனை மதுபான பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ராஜனை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த மொடக்குறிச்சி காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ஈரோடு சோலார் பகுதியில் காவல் துறையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது 2 இரு சக்கர வாகனங்களில் வந்த 4 பேரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில் ஈரோடு மோளகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த பிரவீன் குமார், நோசிகாட்டுவலசு அன்பரசன், மணல்மேடு பகுதியைச் சேர்ந்த தயாளன், சோலாரைச் சேர்ந்த நந்தகுமார் எனத் தெரியவந்தது. 4 பேரும் சேர்ந்து டாஸ்மாக் மதுபான கடை ஊழியரை தாக்கிய விவரமும் தெரியவந்தது. இதையடுத்து நால்வரையும் கைது செய்த மொடக்குறிச்சி காவல் துறையினர் 2 இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago