திருச்செங்கோடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் விபத்துகள் இல்லாமல் பேருந்தை இயக்கிய போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்தார். திருச்செங்கோடு சட்டப்பேரவை உறுப்பினர் பொன்.சரஸ்வதி, அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி பரிசு வழங்கிப் பேசியதாவது:
கடந்த ஆண்டு விபத்துகள் இன்றி பாதுகாப்பாக பேருந்து இயக்கியதற்காக முதல்கட்டமாக நாமக்கல் 1 கிளையில் 333 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. அதேபோல் தற்போது 2-ம் கட்டமாக திருச்செங்கோடு கிளையில் உயிரிழப்பு, விபத்து இல்லாமல் பேருந்து இயக்கிய 369 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டுள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் மண்டலத்தில் இதேபோல் தம்மம்பட்டி கிளை தேர்வாகியுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சேலம் கோட்டத்தில் 2018 முதல் 2020 மார்ச் வரை 860 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இதில் குளிர்சாதன பேருந்துகளும் அடங்கும். நாமக்கல் மாவட்டத்திற்கு மட்டும் 95 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. இதில், திருச்செங்கோடு கிளையில் மட்டும் 18 புதிய பேருந்துகள் இயக்கப்படுகிறது.
நிலுவையில் இருந்த ஓய்வூதிய பணப்பலன் 2019 டிசம்பர் வரை சேலம் கோட்டத்திற்கு மட்டும் ரூ.109.76 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பில் போக்குவரத்துத் துறைக்கு ரூ.2,716 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும். அவர்களது கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது, என்றார்.
திருச்செங்கோடு கோட்டாட்சியர் ப. மணிராஜ், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட பொது மேலாளர் து.லக்ஷ்மண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago