கோபியை அடுத்த இந்திரா நகர் பகுதியில் ரூ.4.76 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சிறுவர் பூங்கா மற்றும் படகு சவாரியை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
கோபி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட மொடச்சூர் ஊராட்சி இந்திரா நகர் பகுதியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.4.76 கோடி மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா மற்றும் குளத்தில் படகு சவாரி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் தொடங்கி வைத்து, குளத்தில் ஆட்சியர் சி.கதிரவனுடன் படகு சவாரி மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, ‘கொடிவேரியில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோபியில் 7 இடங்களில் பூங்கா திறக்கப்பட்டுள்ளது.
மேலும் 11 இடங்களில் பூங்கா அமைக்க நட வடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது, என்றார்.
இதனைத் தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட வ.உ.சி.பூங்கா மைதானத்தில் ரூ.6.42 கோடி மதிப்பீட்டில் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் புனரமைக்கப்பட்ட பூங்கா மற்றும் ஈரோடு மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் ஆகியவற்றைத் திறந்து வைத்த அமைச்சர் செங்கோட்டையன், 895 பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனங்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறும்போது, ‘சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் ஈரோட்டிற்கு ரூ.937 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், ரூ.350 கோடியில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ரூ.140 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது, என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கவிதா, மாநகராட்சி ஆணையர் மா.இளங்கோவன், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், வட்டார போக்கு வரத்து அலுவலர்கள் பதுவை நாதன், பிரதீபா, சக்திவேல், பழனிவேல், மாதேஸ்வரன், ரவிச்சந்திரன்,முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago