பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வைக் கண்டித்து, திருச்சி மாநகரில் 50 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், அவற்றின் விலையை குறைக்கக் கோரியும், திருச்சி மாநகரில் 50 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்தந்தப் பகுதிக் குழு சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது.
அதன்படி, ரங்கம் அம்மா மண்டபம் சாலையில் இரு சக்கர வாகனத்துக்கு வெள்ளை நிற துணியைப் போர்த்தி, மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் வீரமுத்து தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதேபோல, கலைஞர் அறிவாலயம் எதிரே பகுதிக் குழு உறுப்பினர் சுபி தலைமையில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ரங்கராஜன் உள்ளிட்டோரும், குழுமணியில் அஜித்குமார் தலைமையில் அந்தநல்லூர் ஒன்றியச் செயலாளர் வினோத் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
மேலும், மாம்பழச் சாலை, திருவானைக்காவல், கீழரண் சாலை, பொன்மலை, டிவிஎஸ் டோல்கேட், தலைமை அஞ்சல் நிலையம், ஜங்ஷன் என மாநகரில் 50 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன் இந்தப் போராட்டம் நடைபெற்றது.
சில இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், ஒப்பாரி வைத்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையைக் குறைக்க வலியுறுத்தியும், விலை உயர்வு மற்றும் மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago