அரியலூர் மாவட்டத்தில் 30,542 விவசாயிகள் வாங்கிய ரூ.224.98 கோடி பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தெரிவித்தார்.
அரியலூரில் விவசாய பயிர்க் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. ஆட்சியர் த.ரத்னா தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் எம்எல்ஏ ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார்.
அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், அரியலூர் வட்டத்துக்கு உட்பட்ட 14,845 விவசாயிகளுக்கு ரூ.95.38 கோடி பயிர்க் கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர், அவர் பேசும்போது, ‘‘தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பயிர்க் கடன் பெற்ற 16,43,347 விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான ரூ.12,110 கோடியை தள்ளுபடி செய்து தமிழக முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் உள்ள 64 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் உள்ள 30,542 விவசாயிகள் பெற்ற ரூ.224.98 கோடி பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சி.கோமதி, சரகத் துணைப் பதிவாளர் ஜெயராமன், ஒன்றியக் குழுத் தலைவர் செந்தமிழ்செல்வி, கூட்டுறவு சார் பதிவாளர்கள் பழனியப்பன், சுரேஷ், சசிக்குமார், பழனிசாமி, கேத்ரின், நதியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago