ஏலகிரிமலை-ஜவ்வாதுமலை தொடர்களில் தீ வைத்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

ஏலகிரிமலை மற்றும் ஜவ்வாது மலை தொடர்களில் தீ வைப்போர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகள் குறைதீர்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் எச்சரிக்கை விடுத்தார்.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் விவசாயிகளுக்கான குறைதீர்வுக்கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. வேளாண் இணை இயக்குநர் ராஜசேகர் வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகேஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் கூறும்போது, "திருப் பத்தூர் மாவட்டத்தில் தென்னை மரங்களில் சுருள் பூச்சி தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது. இதை கட்டுப்படுத்த மாவட்ட வேளாண் துறை சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண் பொறியியல் துறை சார்பில் பண்ணைக் குட்டை அமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வழிவகை செய்ய வேண் டும். கூட்டுறவு சங்க திட்டங்களை தெரிந்துக்கொள்ள மாதந்தோறும் குறைதீர்வுக் கூட்டத்தை நடத்த வேண்டும்.

வனவிலங்குகளால் பயிர் வகை கள் அதிக அளவில் சேதமடை கிறது. குறிப்பாக, மயில்களால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல, காட்டுப்பன்றிகளாலும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பதில்லை, வன விலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏரி, குளம், நீர்வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை விவசாய தொழிலுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.

ஏலகிரி மலைப்பகுதியில் உள்ள மஞ்சம்புற்களை சில விஷமிகள் அடிக்கடி தீயிட்டு கொளுத்துவதால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் வாய்ப் புள்ள பகுதிகளில் உலர்களம் அமைக்க வேண்டும்" என்றனர்.

இதையடுத்து ஆட்சியர் சிவன் அருள் பேசும்போது, " விவசாயி களின் கோரிக்கைகள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், ஏலகிரி மலை மட்டும் அல்ல ஜவ்வாதுமலைப்பகுதியிலும் தீ வைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் வந்துள்ளன. வனக்குழு மூலம் மலைப்பகுதிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, மலைப்பகுதிகளில் தீ வைப்பு சம்பவம் இனி தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப் படும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்