கோபி அருகில் உள்ள குண்டேரிப்பள்ளம் அணையில் ரூ.1.86 கோடி மதிப்பில், சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல் மற்றும் அணுகு சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை விழா நேற்று நடந்தது. பணிகளைத் தொடங்கி வைத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டுள்ள கொடிவேரி அணையை சுற்றுலா மையமாக மாற்றுவதற்கு ரூ.2.69 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து குண்டேரிப்பள்ளம் அணை சுற்றுலா தலத்தில் ரூ.1.86 கோடி மதிப்பீட்டில் சுற்றுலா பயணிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அணுகுசாலை அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜையிட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, இரு ஓய்வு அறைகள், வாகனங்கள் நிறுத்தும் இடம் மற்றும் அணுகு சாலை ஆகியவை அமைக்கப்படவுள்ளது.
குண்டேரிப்பள்ளம் அணை ஆண்டிற்கு 2 முதல் 3 முறை நிரம்பி வருகிறது. அணையிலிருந்து ஆண்டுதோறும் 20 நாட்கள் நாளொன்றுக்கு சுமார் 300 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. எனவே, தடுப்பணைகள் கட்டப்பட்டு அதன் மூலமாக சுற்றுப்புறங்களில் உள்ள நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது. கூடுதலாக மற்றொரு தடுப்பணை கட்டுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து உபரியாக செல்லும் நீரை தேக்கி வைக்கும் வகையில், அணையின் நீர் மட்டத்தை 3 அடி உயர்த்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மழை, பேரிடர் காலங்களில் ஏற்படும் வெள்ளத்தை தடுக்கும் வகையில், 500 மீட்டர் அளவில் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விளாங்கோம்பை பகுதியில் 47 குடும்பங்களுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தலா ரூ.3 லட்சத்தில் பசுமை வீடுகள் கட்டித்தருவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அப்பணிகள் 75 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது.
குண்டேரிப்பள்ளம் - விளாங் கோம்பை இடையே தார்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் வனத்துறையின் மூலமாக பள்ளிகளை நடத்து வதற்கும், அங்கேயே தங்கி ஆசிரியர்கள் பணிகளை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது, என்றார்.
இதனைத் தொடர்ந்து அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் கீழ் வரப்பாளையம் நீரேற்று நிலைய பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, கோபி ஆர்.டி.ஓ.ஜெயராமன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தாமோதரன், உதவி செயற்பொறியாளர் திருமூர்த்தி, உதவி பொறியாளர் கல்பனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago