வேலூரில் ரூ.3 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் இருந்து வேலூருக்கு லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வேலூர் காகிதப்பட்டறை பகுதியில் மாநகராட்சி ஆணையர் சங்கரன் நேற்று காலை ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்குள்ள டாஸ்மாக் கடை அருகேயுள்ள ஒரு பார்சல் கடையின் முன்பாக லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. சந்தேகத்தின்பேரில் விசாரித்தபோது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மாநகராட்சியின் நல அலுவலர் டாக்டர் சித்ரசேனா, மண்டல அலுவலர் மதிவாணன், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் உள்ளிட்ட குழுவினர் விரைந்து சென்றனர். பின்னர், அந்த லாரியை மாநகராட்சி ஊழியர்கள் சோதனையிட்டதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள், தேநீர் கப்புகள் உள்ளிட்டவை பார்சல்களாக இருந்தது. சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை வேலூரில் உள்ள கடைகளுக்காக புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், பிளாஸ்டிக் பொருட்கள் கடத்தி வரப்பட்ட கிடங்குக்கு ‘சீல்' வைத்தனர். மாநகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை சட்டம் அமலில் இருப்பதால், யாருக்கெல்லாம் அபராதம் விதிப்பது என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்