அம்மா மினி கிளினிக் திறக் காததைக் கண்டித்து, தி.மலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெய்யாரில் நேற்று முன் தினம் தர்ணா நடைபெற்றது.
வந்தவாசி அடுத்த தெய்யார் கிராமத்தில் அம்மா மினி கிளினிக் திறப்பதற்காக துணை சுகாதார நிலையத்தை செப்பனிட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டது. அம்மா மினி கிளினிக் கடந்தாண்டு டிசம்பர் மாதம் திறக்கப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். ஆனால், பிப்ரவரி மாதமும் திறக்கவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்து, கிராம துணை சுகாதார நிலையம் முன்பு நேற்று முன்தினம் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, “கடந்த டிசம்பர் மாதம் திறக்கப்படும் என அறிவித்தும், இதுநாள் வரை திறக்கப்படவில்லை. அதேநேரத்தில் மேல்பாதி மற்றும் குறிப்பேடு கிராமங்களில் மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், சத்தியவாடி, மருதாடு, கீழ்க்கொவளைமேடு கிராமங்களில் கடந்த 16-ம் தேதி மினி கிளினிக்குகள் திறக்கப்பட்டுள்ளன. எங்கள் கிராமத்துக்கு வர வேண்டிய மினிகிளினிக், வேறு கிராமத்தில் திறக்கப் பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
எனவே, எங்கள் கிராமத்தில் அம்மா மினி கிளினிக் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிப்போம்” என்றனர். இதுகுறித்து தகவலறிந்த தெள்ளார் காவல் துறையினர் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago