ரூ.3 கோடி மதிப்பிலான உள்விளையாட்டரங்கம் கோபியில் அமைச்சர் தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணா நகரில், ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உள் விளையாட்டரங்கினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து பல்வேறு விளையாட்டு அரங்குகளைத் தொடங்கி வைத்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணா நகரில், ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கத்தில், அரை வட்டம் கொண்ட கையுந்துபந்து உள் விளையாட்டரங்கம், கபடி மைதானம், மேஜைப்பந்து, கேரம், சதுரங்கம் மற்றும் யோகா பயிற்சி மேற்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மாநிலம் முழுவதும் உள்ள 12 ஆயிரத்து 522 ஊராட்சிகள், 525 பேரூராட்சிகளில் இதுபோன்ற விளையாட்டு அரங்கங்கள் அமைப்பதற்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. கிராமங்கள் தோறும் விளையாட்டுப் போட்டியினை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ.67 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் தோறும் அனைத்து விளையாட்டுக்களையும் ஒருங்கிணைத்து, விளையாட்டு அரங்கங்கள் அமைக்க மத்திய அரசின் மூலம் நிதி கோரப்பட்டுள்ளது. இதில் ஈரோடு மாவட்டம் உள்ளிட்ட இரு மாவட்டங்கள் தேர்வாகியுள்ளன, என்றார்.

நிகழ்ச்சியில், கோபி ஆர்.டி.ஓ. ஜெயராமன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஸ்குமார், கோபி கல்வி மாவட்ட அதிகாரி சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்து கபடி, கைப்பந்து, மேஜைப்பந்து, கேரம் ஆகிய போட்டிகளில் பங்கேற்று அமைச்சர் செங்கோட்டையன் வீரர்களை உற்சாகப்படுத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்