அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி சித்தோட்டில் குடியிருப்புவாசிகள் போராட்டம்

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகேயுள்ள ஐயன்வலசு மற்றும் அதனையொட்டியுள்ள மூன்று கிராமங்களில் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலப்பகுதியில், 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட இந்த இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு வீடுகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் குடியிருப்போரை காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி குடியிருப்புவாசிகள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியது:

கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் இப்பகுதியில் குடியிருந்து வருகிறோம். பலருக்கு வருவாய்த்துறை பட்டா வழங்கியுள்ளது. எங்களது வீடுகளுக்கு மின் இணைப்பு, ரேஷன்கார்டு போன்றவை வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்காக, எங்களைக் காலி செய்யுமாறு கூறுகின்றனர். வீடுகளைக் காலி செய்யாவிட்டால், இடித்து அகற்றப்படும் என அதிகாரிகள் மிரட்டுகின்றனர்.

நாங்கள் குடியிருக்கும் நிலத்தைப் பறிக்காமல், வேறு இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி இன்று வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். மாவட்ட நிர்வாகம் தனது முடிவைக் கைவிடும் வரை தொடர்ந்து போராடுவோம், என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்