விழுப்புரம் அருகே மின் இணைப்புவழங்க லஞ்சம் வாங்கிய வழக்கில் மின்வாரிய வணிக ஆய்வாள ருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
விழுப்புரத்தை அடுத்த அனந்தபுரம் அருகே சிற்றரசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சோமு (32). விவசாயியான இவர் கடந்த 2016-ம் ஆண்டு அதே கிராமத்தில் புதிய வீடு ஒன்றை கட்டினார். அந்த வீட்டுக்கு மின் இணைப்பு பெறுவதற்காக கடந்த 16.6.2016-ல்அனந்தபுரம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கிருந்த வணிக ஆய்வாளரான ராஜூ (44) என்பவரை அணுகினார். அதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சமாக தந்தால் மட்டுமே மின் இணைப்பு வழங்க முடியும் என்று ராஜூ கூறினார்.
இதையடுத்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் சோமு புகார் அளித்தார்.
போலீஸார் அறிவுரைப்படி கடந்த 22.6.2016-ல் சோமு அனந்தபுரம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த வணிக ஆய்வாளர் ராஜூவிடம் ரசாயன பொடி தடவிய பணத்தை கொடுத்தார். அப்போது ராஜூவை லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து அவர் துறை ரீதியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.
நீதிபதி மோகன் இவ்வழக்கில் ராஜூவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தார்.
அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago