எருமப்பட்டி ஜல்லிக்கட்டில் 650 காளைகள் சீறிப்பாய்ந்தன பெண் வட்டாட்சியர் உட்பட 7 பேர் காயம்

By செய்திப்பிரிவு

நாமக்கல் அருகே எருமப்பட்டி யில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக் கட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்தாண்டுக்கான ஜல்லிக்கட்டுப் போட்டி எருமப்பட்டி பொன்னேரியில் நேற்று நடந்தது.

நாமக்கல் மாவட்டம் மட்டுமன்றி சேலம், திருச்சி என மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 650 காளைகள் போட்டியில் பங்கேற்க அழைத்து வரப்பட்டன. 450 மாடுபிடி வீரர்கள் போட்டியில் கலந்து கொண்டனர். அவர்கள் தனித்தனி குழுக்களாக பிரித்து போட்டி நடைபெறும் இடத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

கால்நடை மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் காளைகள் அனுமதிக்கப்பட்டன. போட்டியின் வர்ணனையாளர் காளைகளுக்கு வைக்கப்பட்ட கருப்பன், மாஸ்டர், விருமாண்டி, மின்னல் போன்ற செல்லப்பெயர் மற்றும் அதன் உரிமையாளர்கள் பெயரை படித்து வாடி வாசல் வழியாக திறந்து விடப்பட்டன.

சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் தாவிப்பிடித்து அடக்க முயன்றனர். அவர்களது பிடியில் சிக்காமல் காளைகள் லாவகமாக தப்பின. சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி மிரட்டியபடி சென்றன. மாடுபிடி வீரர்கள் காளைகளின் திமில்களை தாவிப்பிடித்து குறிப்பிட்ட எல்லை வரை சென்றனர்.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கு வெள்ளி அரைஞாண் கயிறு, கட்டில், சைக்கிள், பண முடிப்பு என பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. வீரர்களின் பிடியில் சிக்காத காளைகளுக்கு விழாக் குழுவினர் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. இதனிடையே காளைகள் முட்டி வீசியதில் விஸ்வா (20), விக்னேஸ்வரன் (26), இலியாஸ் (25) ஆகிய மாடுபிடி வீரர்களும், சங்கர் (35), ரஞ்சித்குமார் (22), இளங்கோ (31) என காளை உரிமையாளர்களும் படுகாயமடைந்தனர்.

மேடை அருகே நின்றபடி விழா ஏற்பாடுகளை கவனித்து வந்த சேந்தமங்கலம் வட்டாட்சியர் ஜானகியை (51) காளை முட்டியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். இதுபோல் 33 பேர் லேசான காயமடைந்தனர். அனைவருக்கும் அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு நாமக்கல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்.

நாமக்கல் எம்பி ஏ.கே.பி.சின்ராஜ், கோட்டாட்சியர் கோட்டைக்குமார், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் உள்ளிட்டோர் போட்டியை கண்டு ரசித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்