வரத்து குறைவால் விலை உயர்வு ஈரோட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.140-க்கு விற்பனை

By செய்திப்பிரிவு

வரத்து குறைவு காரணமாக, ஈரோட்டில் சின்னவெங்காயத்தின் விலை கிலோ ரூ.140-க்கு விற்பனையானது.

தமிழகத்தில் ஈரோடு, திண்டுக்கல், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், திருப்பூர், திருநெல்வேலி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அதிக அளவிலும், பெரிய வெங்காயம் குறைந்த அளவிலும் சாகுபடி செய்யப்படுகிறது. இதனால், மகாராஷ்டிரா, குஜராத், ஒடிசா, உத்தரபிரதேசம், பிஹார், பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் இருந்து வரும் பெரிய வெங்காயம் தமிழக சந்தையில் பெருமளவில் விற்கப்படுகிறது.

ஈரோடு காய்கறிச் சந்தைக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் வடமாநிலங்களில் இருந்து 200 முதல் 250 டன் வரை வெங்காய வரத்து உள்ளது. வடமாநில வியாபாரிகள் தாங்கள் இருப்பு வைத்துள்ள வெங்காயத்தையே தற்போது விற்பனைக்கு கொண்டு வருவதாகவும், தேவை அதிகரிப்பால் விலையை உயர்த்தி வருவதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதத்திற்கு பிறகு புதிய வெங்காயம் விற்பனைக்கு வந்தால், விலை குறைய வாய்ப்புள்ளது, என்றனர்.

அதேபோல், கோவை, திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், மைசூருவில் இருந்தும் வரும் சின்ன வெங்காயத்தின் வரத்தும் வெகுவாகக் குறைந்துள்ளது. இதன்காரணமாக ஈரோட்டில் சின்ன வெங்காயத்தின் சில்லறை விற்பனை விலை கிலோ ரூ.120 முதல் ரூ.140 வரை விற்பனையானது. உழவர் சந்தையில் சற்று விலை குறைந்து ரூ.98-க்கும், பெரிய வெங்காயம் ரூ.60-க்கும் விற்பனையானது. திருமண முகூர்த்தங்கள் அடுத்தடுத்த நாட்களில் வரவுள்ளதால், வெங்காயத்தின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ள வியாபாரிகள், பெரியவெங்காயத்தின் வரத்து அதிகரித்தால், சின்ன வெங்காய பயன்பாடும், அதன் காரணமாக விலையும் குறையும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்