சங்கர்நகர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு மக்கள் அடிப்படை வசதிகளின்றி திண்டாட்டம் பேரூராட்சிக்கு அதிக வரி கொடுத்தும் பலனில்லை என புகார்

By செய்திப்பிரிவு

அடிப்படை வசதிகள் கேட்டு, சங்கர்நகர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்போர் நலச்சங்கத்தினர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் மனு அளித்தனர்.

ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், இச்சங்கத்தினர் அளித்த மனு:

சங்கர்நகர் சிறப்புநிலை பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, முத்துநகர், கணேஷ்நகர், நேதாஜி நகர், விட்டல்நகர் மற்றும் சீனிவாச நகர், சாரதாம்பாள் நகர், நாராயண நகர் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியதாகும். சிறப்பு நிலை பேரூராட்சிக்கு இங்கிருந்துதான் அதிக வரி கிடைக்கிறது. ஆனால், அடிப்படை வசதிகளை சரிவரசெய்துதரவில்லை. பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கைகள் வைத்தும்எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இப்பகுதியில் சாலை, குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் அவதி

பாளையங்கோட்டை வட்டத்திலுள்ள பொட்டல், படப்பக்குறிச்சி, வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் அளித்த மனு:

திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை, அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய 10-1 அடங்கல் தேவைப்படுகிறது. இதைதருவதற்கு மாநகராட்சிக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மறுக்கிறார்கள்.

இது தொடர்பாக, பாளையங்கோட்டை வட்டாட்சியரிடம் கடந்த 8-ம்தேதி புகார் தெரிவித்தும் நடவடிக்கைஎடுக்கவில்லை. அறுவடைக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் நிலையம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் பி. பெரும்படையார் அளித்த மனு:

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த மழையால் அதிக இடங்களில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடைப் பருவத்தை அடைந்து வருகிறது. எனவே, மாவட்ட குழு அனைத்து இடங்களிலும் ஆய்வுசெய்து தேவையான இடங்களில் நேரடிநெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும். குறிப்பாக, நாங்குநேரி, திருக்குறுங்குடியில் அறு வடைப் பணிகள் தொடங்கிவிட்டதால் அங்கு நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.

ஊரக வேலைத்திட்டம்

களக்காடு அருகேயுள்ள சீவலப்பேரி பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், ஊரக வேலை உறுதி திட்டத்தில் தங்களுக்கு பணி வழங்கி 6 மாதம் ஆகிவிட்டதாகவும், இதனால், வேலையின்றி கஷ்டப்படுவதாகவும், தொடர்ந்து பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்