மேலப்பாவூரில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக் கோரி தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்துகோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
தென்காசி மாவட்டம், மேலப்பாவூரைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.
பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் அவர்கள் அளித்த மனுவில்‘மேலப்பாவூரில் அனைத்துத் தரப்புமக்களும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில், எங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையால் அவ்வப்போது ஜாதி மோதல்கள் ஏற்படுகின்றன. பள்ளி மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் நிம்மதியாக நடமாட முடியவில்லை. மீண்டும் ஜாதி மோதல்கள் ஏற்படாமல் தடுக்க டாஸ்மாக் மதுக் கடையை அங்கிருந்து அகற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் டேனி அருள்சிங் மற்றும் நிர்வாகிகள் ஆட்சியர் அலுவலகத்தில் அளித்தமனு:
‘தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் கடந்த 2006-ம் ஆண்டுக்கு பின் பராமரிப்புப் பணிகள் முறையாக நடைபெறாததால் 2018-ம் ஆண்டு நடந்திருக்க வேண்டிய குடமுழுக்கு விழா நடைபெறாமல் உள்ளது. பாரம்பரியமிக்க காசி விஸ்வநாதர் கோயிலை முறையாக பராமரித்து குடமுழுக்கு விழா நடத்த வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
கீழ ஆம்பூர் பகுதியைச் சேர்ந்தவிவசாயிகள் அளித்துள்ள மனுவில், ‘கீழ ஆம்பூரில் உள்ள நெல்கொள்முதல் நிலையத்தால் விவசாயிகள் பயன் பெறவில்லை. வியாபாரிகள், இடைத்தரகர்கள் தலையிட்டு தங்களிடம் நெல்விற்பனை செய்யுமாறு விவசாயிகளை மிரட்டுகின்றனர். எனவே, நெல் கொள்முதல் நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.
கடையநல்லூர் வட்டம், நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் விவசாயிகள் சங்க நிர்வாகி மாடசாமி அளித்துள்ள மனுவில், ‘நொச்சிகுளம் கிராமத்தில் கடந்த 6 மாத காலமாக தாமிரபரணி குடிநீர் வழங்கப்படவில்லை. அதிகாரிகளிடம் பல முறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago