திருவள்ளூர் - சென்னை சென்ட்ரல் வழித்தடத்தில் 5 ரயில் நிலையங்களில் யுடிஎஸ் முறையில் பயணச் சீட்டு வழங்க வேண்டும்ரயில் பயணிகள் கோரிக்கை

திருவள்ளூர் - சென்னை சென்ட்ரல் வழித்தடத்தில் உள்ள புட்லூர், நெமிலிச்சேரி உட்பட 5 ரயில் நிலையங்களில் யுடிஎஸ் எனப்படும் கணினிவாயிலாக வழங்கப்படும் பயணச்சீட்டு வழங்கும் வசதியை ஏற்படுத்தவேண்டும் என, ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, ரயில் பயணிகள் கூறியதாவது:

திருவள்ளூர் - சென்னை சென்ட்ரல் மார்க்கத்தில் நாள்தோறும் ஏராளமான பயணிகள் ரயில் மூலம் பயணிக்கின்றனர். இவ்வழித் தடத்தில் உள்ள புட்லூர், நெமிலிச்சேரி, இந்துக் கல்லூரி, அன்னணூர் மற்றும் திருமுல்லைவாயில் ஆகிய ரயில் நிலையங்களில் கணினி மூலம் ரயில் பயணச் சீட்டு (யுடிஎஸ்) வழங்கப்படுவது இல்லை. மாறாக, பழைய முறையிலான காகித அட்டையில் அச்சிடப்படும் பயணச் சீட்டு மட்டுமே வழங்கப்படுகிறது.

இதனால், மேற்கண்ட ரயில்நிலையங்களில் ரிட்டர்ன் டிக்கெட்,சீசன் டிக்கெட், மூத்த குடிமக்களுக்கான சலுகைப் பயணச் சீட்டுஉள்ளிட்டவற்றை பெற முடியவில்லை. அத்துடன், சென்னை கடற்கரை வழியாக தாம்பரம் வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களுக்கு டிக்கெட் பெற முடியவில்லை.இதனால், சென்னை சென்ட்ரல் வழியாகத்தான், தாம்பரம் வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது.

எனவே, மேற்கண்ட ரயில் நிலையங்களில் ‘யுடிஎஸ்’ பயணச் சீட்டுகளை வழங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என இப்பகுதி பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE