கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு திட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னிமலையில் ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்யக்கோரி, சென்னிமலையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர்.

கீழ்பவானி வாய்க்காலில் நீர்க்கசிவைத் தடுத்து, கடைமடை வரை நீர் சென்று சேரவேண்டும் என்ற நோக்கோடு கான்கிரீட் தளம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்தை நிறைவேற்றினால் வாய்க்காலை ஒட்டியுள்ள பகுதிகளில் நீர் செரிவூட்டுவது நின்றுபோய், விவசாய நிலங்கள் வெகுவாக பாதிக்கப்படும். கீழ்பவானி பாசனப்பகுதிகளில் வறட்சி ஏற்பட்டு, குடிநீர் பஞ்சமும் ஏற்படும் எனக்கூறி கீழ்பவானி பாசன விவசாயிகள் இந்த திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட வலியுறுத்தி, கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னிமலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முருங்கத்தொழுவு ஊராட்சி முன்னாள் தலைவர் மு.ரவி தலைமை தாங்கினார். பி.சி.செங்கோட்டையன் (கீழ்பவானி பாசன சபை யு-8), கே.சி.பழனிசாமி (கொங்கு வேளாளர் மகா சபை), துளசிமணி (விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்க தலைவர் செ.நல்லசாமி கலந்து கொண்டு கான்கிரீட் திட்டத்தால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர், கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் சார்பில் முதல்வருக்கு தபால் அட்டை அனுப்பப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் கிருஷ்ணவேணி சிவக்குமார் (பனியம்பள்ளி), தங்கவேல் (எக்கட்டாம்பாளையம்), ஏ.ரமேஷ் (புதுப்பாளையம்) ஓ.சி.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்