25 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் நேற்று திருச்சியில் ஆர்ப்பாட்டமும், நாகையில் சாலை மறியலும் நடைபெற்றது.
திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, நியாயவிலைக் கடை பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் பா.ரமேஷ் தலைமை வகித்தார். டாஸ்மாக் பணியாளர் சங்க மாநிலச் செயலாளர் பி.முருகானந்தம் பேசினார்.
டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் எம்.பிச்சைமுத்து, செயலாளர் என்.கண்ணன், சமூக நலத் துறை பணியாளர் சங்கம் டி.அருணாதேவி, ரேஷன் கடை பணியாளர் சங்க மாவட்டப் பொருளாளர் பிச்சைப்பிள்ளை, அமைப்புச் செயலாளர் ஏ.சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
டாஸ்மாக் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குவதுடன், அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களில் நிரந்தர அடிப்படையில் பணியமர்த்த வேண்டும். கூட்டுறவு மற்றும் நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும்.
அரசு மற்றும் அரசுத் துறை நிறுவனங்களில் தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் பல்வேறு அரசுத் துறைகளின் பணியாளர்கள், அங்கன்வாடி- சத்துணவு- துப்புரவுப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள், மேல்நிலை நீர்த்தொட்டி இயக்குவோர், அவுட்சோர்சிங் பணியாளர்கள் ஆகியோருக்கு நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதே கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநிலத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் வெற்றி செல்வம், செயலாளர் பிரகாஷ், பொருளாளர் மகேந்திரன், துணைத் தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பங்கேற்ற 17 பெண்கள் உட்பட 106 பேரை போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago