திருப்பத்தூர் அருகே கோயில் பூசாரி கொலை காவல் துறையினர் விசாரணை

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் அருகே கோயில் பூசாரியை வெட்டிக்கொலை செய்த மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த வடுகம் முத்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பூசாரி சீனிவாசன் (32). சீனிவாசன் தனது வீட்டின் அருகே  காளியம்மன் கோயில் ஒன்றை நிறுவினார். இக்கோயிலில் வெள்ளிக்கிழமை, செவ்வாய்க்கிழமை, அமாவாசை, பவுர்ணமி ஆகிய தினங்களில் சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறி வந்தார். சீனிவாசனுக்கும், அவரது மனைவி லட்சுமிக்கும் (28) இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு லட்சுமி கணவரை பிரிந்து தாய் வீட்டுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

சீனிவாசன் தனது பெற் றோருடன் வடுகம்முத்தம்பட்டி கிராமத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் தை அமாவாசையொட்டி  காளியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் நூற்றுக்கணக் கான பக்தர்கள்  காளியம்மன் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து விட்டு, சீனிவாசனிடம் அருள்வாக்கு கேட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

அன்றிரவு, 10 மணியளவில் கோயிலில் விசேஷ பூஜைகளை முடித்துவிட்டு, சீனிவாசன் வீட்டுக்கு புறப்பட்டதாக கூறப் படுகிறது. இந்நிலையில், கோயில் அருகாமையில் சீனிவாசன் ரத்த வெள்ளத்தில் உடலில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடப்பதை அப்பகுதி மக்கள் நேற்று அதிகாலை கண்டு திடுக்கிட்டனர்.

உடனே, குரிசிலாப்பட்டு காவல் நிலையத்துக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். அதன்பேரில், அங்கு சென்ற காவல் துறையினர் விசாரணை நடத்தினர். சீனிவாசன் உடலில் வெட்டுக்காயங்கள் இருந்ததால் மர்ம நபர்கள் அவரை வெட்டிக்கொலை செய்து உடலை சாலையோரம் வீசிவிட்டு சென்றிருப்பது தெரியவந்தது. பூசாரி சீனிவாசன் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக திருப் பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் பூசாரி வெட்டிக்கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் குரிசிலாப்பட்டு பகுதியில் நேற்று சலசலப்பை ஏற்படுத்தியது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்