பவானி கூடுதுறை, கொடுமுடியில் புனிதநீராடி தை அமாவாசையையொட்டி மக்கள் வழிபாடு

By செய்திப்பிரிவு

தை அமாவாசையையொட்டி பவானி கூடுதுறை மற்றும் கொடுமுடியில் புனித நீராடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.

அமாவாசை நாட்களில், நதிக்கரை யோரங்களில் மறைந்த முன்னோர்களுக்கு இந்துக்கள் தர்ப்பணம் செய்து திதி கொடுப்பது வழக்கம். குறிப்பாக, ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை நாட்களில் காவிரி, பவானி மற்றும் சரஸ்வதி நதிகள் ஒன்றுகூடும் பவானி கூடுதுறை, கொடுமுடி காவிரிக்கரையில் திதி கொடுக்க ஆயிரக் கணக்கான மக்கள் வருவது வழக்கம். பவானி கூடுதுறையில் தை அமாவாசை நாளான நேற்று அதிகாலை முதல் ஏராளமான மக்கள் திதி கொடுத்தனர்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்த போலீஸார், அனைவரையும் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர்.

இதேபோல் கொடுமுடி மகுடேஸ்வரர் - வீரநாராயணப் பெருமாள் கோயில் காவிரிக்கரையில் திரண்ட மக்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து திதி கொடுத்தனர். காலிங்கராயன் வாய்க்கால் பகுதி, ஈரோடு காவிரிக்கரைப் பகுதிகளிலும் ஏராளமானவர்கள் திரண்டு முன்னோர்களை வழிபட்டனர்.

கோயில்களில் தர்ப்பணம்

தை அமாவாசையை முன்னிட்டு, நேற்று சேலம் மாவட்டத்தில் உள்ள சிவ ஆலயங்கள், மேட்டூர் காவிரி கரையோரம் மற்றும் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பொதுமக்கள் ஏராளமானோர் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

இதேபோல மேட்டூர் காவிரி கரையோரங்களிலும், பேளூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயம், சித்தர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களிலும் ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் வழங்கி வழிபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்