ஈரோடு கிருஷ்ணம்பாளையத்தில் பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, இயந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கிருஷ்ணம்பாளையம் சிந்தன் நகரில் பாதாள சாக்கடைக்கான பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு பணிகளை தொடங்குவதற்காக பொக்லைன் இயந்திரம் நேற்று கொண்டு வரப்பட்டது. தகவல் அறிந்ததும், அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு, பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பொதுமக்கள் கூறியதாவது:
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சிந்தன் நகர், மாதவ காடு ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளிகள் உள்ளன. இந்நிலையில் இங்கு பாதாள சாக்கடைக்கான பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடக்கிறது. இங்கு பொது சுத்திகரிப்பு நிலையம் அமைந்தால் சுகாதார சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, குடியிருப்புகள் நிறைந்த எங்கள் பகுதியில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கூடாது, என்றனர். பொதுமக்கள் எதிர்ப்பால், பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago