இரும்பு, சிமென்ட் விலை உயர்வை கட்டுப்படுத்தக் கோரி கட்டுநர் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சிமென்ட், இரும்பு உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் கடுமையான விலை உயர்வைக் கண்டித்தும், விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கக் கோரியும் கட்டுநர் சங்கத்தினர் இன்று (பிப்.12) திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

அகில இந்திய கட்டுநர் சங்கத்தின் திருச்சி மையத்தின் தலைவர் ஆர்.சரவணன், செயலாளர் ஆர்.சுப்பிரமணி, துணைத் தலைவர் ஜி.ஜோதி மகாலிங்கம், செயற்குழு உறுப்பினர் பி.ரமேஷ்பாபு உள்ளிட்டோர் திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

உலகில் எந்த நாட்டிலும் இரும்பு, சிமென்ட் விலை உயர்த்தப்படாத நிலையில், இங்கு மட்டும் கடந்த 2 மாத காலத்தில் கட்டுமானப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இரும்பு விலை 40 சதவீதமும், சிமென்ட் விலை 30 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலை உயர்வு உற்பத்தியாளர்களால் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பொதுமக்களின் வீடு கட்டும் கனவு, கானல்நீராகும் நிலை உருவாகியுள்ளது. அனைவருக்கும் வீடு என்ற திட்டம் கேள்விக்குறியாகியுள்ளது.

அரசு கட்டுமானப் பணி ஒப்பந்ததாரர்களுக்கு ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில், ஒப்பந்தத்துக்குப் பிறகு உயர்த்தப்பட்ட விலைக்கான தொகையை அந்த மாநில அரசுகள் வழங்கியுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் அதுபோல வழங்கப்படவில்லை. இதனால், அரசுக் கட்டுமானப் பணிகளில் தொய்வு ஏற்பட்டு, தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள், கட்டுநர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரத்தை பாதிக்கச் செய்யும் இரும்பு, சிமென்ட் ஆகியவற்றின் விலை உயர்வைக் கண்டித்தும் மற்றும் இரும்பு, சிமென்ட் ஆகியவற்றின் விலை உயர்வைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இரும்பு, சிமென்ட் விலையை நிர்ணயம் செய்ய ஒழுங்குமுறை ஆணையத்தை மத்திய, மாநில அரசுகள் அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் அகில இந்திய கட்டுநர் சங்கம் சார்பில் இன்று (பிப்.12) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றனர்.

சங்கத்தின் பொருளாளர் ராமு சுரேஷ், முன்னாள் துணைத் தலைவர் எம்.திரிசங்கு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இன்று வேலைநிறுத்தம்

அகில இந்திய கட்டுநர் சங்க பெரம்பலூர் கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சங்கத்தின் தலைவர் ராஜாராம் தலைமையில் பெரம்பலூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கட்டுமானப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்து இன்று (பிப்.12) பெரம்பலூர் மாவட்டத்தில் கட்டுநர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்